பலன்தரும் பரிகாரத்  தலம்

உணவு இல்லை, உறக்கம் இல்லை... எப்போதும் பகவானின் நாமத்தை தியானித்து வந்ததால், அவர்கள் உடல் துரும்பென இளைத்தது.
பலன்தரும் பரிகாரத்  தலம்

பக்தர்களின் கஷ்டங்களை பெற்றுக் கொள்பவன்
 திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருக்கோயில்

முனிவர்கள் சிலர்... ஓர் இடத்தில் மகாவிஷ்ணுவைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தனர். உணவு இல்லை, உறக்கம் இல்லை... எப்போதும் பகவானின் நாமத்தை தியானித்து வந்ததால், அவர்கள் உடல் துரும்பென இளைத்தது. கூடவே அவர்களைச் சுற்றி புற்களும் நெற்கதிர்களும் முளைத்தன.
 அந்த நேரம், அவ்வழியாக மன்னன் உபரிசிரவஸ் தன் படை வீரர்களுடன் வந்து கொண்டிருந்தான். அவன் எட்டெழுத்து மந்திரம் கைவரப் பெற்றவன். பெருமாளின் அருள் கூடப் பெற்றவன். அந்த இடத்துக்கு வந்த படை வீரர்கள் அடுத்து உணவுக்கு என்ன வழி என்று யோசித்தனர். அங்கே நெற்கதிர்கள் முளைத்திருந்ததைக் கண்டு, அவற்றை அரிந்து எடுத்தனர். அப்போது, நெற்கதிர்களின் ஊடே துரும்பென மெலிந்த தேகத்துடன் தவத்தில் இருந்த முனிவர்களின் தலையையும் சேர்த்தே கொய்து விட்டனர். இதை உணர்ந்த பெருமாள், சிறுவன் வடிவம் எடுத்து, அந்தப் படை வீரர்களுடன் சண்டையிட்டார். அவர்கள் தோற்றோடினர். மன்னன் உபரிசிரவஸ் களத்தில் இறங்கி சிறுவனுடன் போரிட்டார். தாக்குப் பிடிக்க முடியாத மன்னர், இறுதியில் தான் பெற்றிருந்த எட்டெழுத்து மந்திர மகிமையால் அஸ்திரப் பிரயோகம் செய்தார். ஆனால், அந்த அஸ்திரம் பெருமாளின் பாதத்தில் சரண் புகுந்தது. இதைக் கண்ட மன்னன், "வந்திருப்பவர் சாதாரணர் அல்லர், சாட்சாத் விஷ்ணுவேதான்' என்று முடிவு செய்து, அவரை விழுந்து வணங்கினார். சிறுவன் வடிவில் இருந்து பெருமாளும், நீலமேக சியாமளனாக மன்னனுக்குக் காட்சி தந்தார். பின்னர் மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த இடத்திலேயே எழுந்தருளினார்.
 இத்தகைய புராணக் கதையைத் தன்னுள்ளே கொண்டு திகழ்கிறது, திருக்கண்ணபுரம் ஸ்ரீசெüரிராஜப் பெருமாள் திருக்கோயில். பெருமாள் நீலமேக சியாமளனான கண்ணபெருமான் என்றாலும், அவருக்கு செüரிராஜப் பெருமாள் எனும் பெயர் வந்தது பிற்காலத்திய நிகழ்வு ஒன்றின் காரணத்தால் என்று கூறப்படுகிறது.
 ஒரு முறை, இந்தக் கோயிலில் அர்ச்சகராக இருந்த ஒருவர், பெருமாள் சூட்டிய மாலையைத் தம் உளம் கவர் காதல் மனையாளுக்குக் கொடுத்து, அவள் கழுத்தில் சூடி அழகு பார்த்தார். அந்தி சாய்ந்த அந்த நேரத்தில், கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார் அந்நாட்டு அரசர். அவருக்கு பிரசாதம் அளித்து மரியாதை செய்ய வேண்டுமே! "சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்' என்று பெருமாளுக்கு பல்லாண்டு பாடிக் கொண்டிருந்த அர்ச்சகருக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை. பெருமாளை நோக்கினார்... பூக்களும் மாலைகளும் ஏதும் இல்லை. வேறு வழியின்றி, காதல் மனையாளுக்குச் சூடி அழகு பார்த்து ஓரத்தில் வைத்திருந்த மாலையை மன்னருக்கு அளித்து விட்டார். பெற்றுக் கொண்ட மன்னர், அதில் நீளமான பெண்ணின் கூந்தல் முடி இருக்கக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோபமடைந்த மன்னர், "இந்தத் தலைமுடி ஏது?' என்று வினவினார். மனம் கலங்கிய அர்ச்சகர், "பெருமாளின் திருமுடிதான்' என்று கூறிவிட்டார். "அப்படியானால், நாளை பகலில் வந்து பெருமாளை நோக்குவோம். பெருமாளுக்குத் திருமுடி இல்லை எனில் நீர் தொலைந்தீர்' என்று கூறிவிட்டு விறுவிறுவெனச் சென்றுவிட்டார். அச்சத்தின் பிடியில் தவித்த அர்ச்சகர் வழக்கம்போல் பெருமாளையே தஞ்சம் அடைந்தார்.
 மறுநாள் அரசன் வந்து பார்த்தபோது, பெருமாளுக்குத் திருமுடி இருக்கக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். பக்தி செய்து சரண் புகுந்த அர்ச்சகருக்காகத் தம் சிரசில் திருமுடி வளரச் செய்த பெருமாளுக்கு செüரிராஜப் பெருமாள் என்ற பெயர் புகழ் பெறலாயிற்று. இதனால், இங்கே உற்ஸவரான செüரிராஜப் பெருமாள் தலையில் முடியுடன் எழுந்தருளியிருக்கிறார். அமாவாசை அன்று பெருமாளின் திருவீதி உலாவின் போது, இந்தத் திருமுடி தரிசனம் காணலாம்.
 ஒரு முறை அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த முனையதரையன் என்ற குறுநில மன்னனுக்கு பெரும் பிரச்னை வந்தது. ஒவ்வொரு நாளும் பெருமாளை தரிசித்து, அவருக்கு நைவேத்தியம் ஆனபின்பே தானும் உணவு உட்கொள்வது மன்னனின் வழக்கமாக இருந்தது. பெருமாளின் கைங்கரியத்துக்காக பொருளை எல்லாம் செலவழித்து, அரசனுக்குக் கப்பம் கட்ட முடியாமல் தவித்தான் அந்தக் குறுநில மன்னன். அதனால், அரசன் முனையதரையனைக் கைது செய்து சிறையில் அடைத்தான். சிறையில் பெருமாளின் சிந்தனையில் நேரம் கழித்து வருந்தினான் முனையதரையன். அவனுக்காக அரசனின் கனவில் தோன்றிய பெருமாள், முனையதரையனை விடுவிக்குமாறு கட்டளையிட்டார். அரசனும் முனையதரையனை விடுவித்தான். இரவில் தனது இல்லம் திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு கலந்து பொங்கல் செய்து உணவிட்டாள் அவன் மனைவி. உண்ணும் முன், பெருமாளுக்கு மானசீகமான நைவேத்யம் செய்து பின்னர் உண்டான் முனையதரையன். மறுநாள் காலை வழக்கம்போல் அர்ச்சகர் பெருமாளுக்கு திருக்காப்பு கலைத்து விளக்கேற்றிப் பார்த்தபோது, பெருமாளின் திருவாயில் பொங்கல் சிறிது ஒட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர், குறுநில மன்னன் முனையதரையனிடம் தெரிவிக்கவே, அவன் பார்த்து வியந்து, தான் மானசீகமாகப் படைத்த பொங்கலை பெருமாள் ஏற்றுக் கொண்டது அறிந்து பக்திப் பெருக்கால் கதறியழுதான். அன்று முதல் இரவு வேளைகளில் பெருமாளின் விருப்பமாக பொங்கல் நைவேத்யம்தான். அதற்குப் பெயரும் முனையதரையன் பொங்கல்தான்.
 செüரிராஜப் பெருமாள் இங்கே பிரயோகச் சக்கரத்துடன் அருள்கிறார். அருகில் கருடன் கைகூப்பிய கோலத்தில் காட்சி தருகிறார். மாசி பெüர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது.
 இங்கே சிறப்பாகத் திகழ்வது, நவக்கிரக பிரதிஷ்டை. ஒரு முறை தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன் இங்கே நவக்கிரக பிரதிஷ்டை செய்து தோஷம் நீங்கப்பெற்றானாம். இந்திரன் அமைத்த நவக்கிரகம் கோபுரத்தின் கீழ்ப் பகுதியில் சுவரில் பிரதிஷ்டையாகி உள்ளது. சுற்றிலும் 12 ராசிகளுடன் உள்ளது இது. பூலோக வைகுண்டமான இங்கே சொர்க்கவாசல் இல்லை. திவ்யதேசங்களில் கீழை வீடாகவும் பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது திருக்கண்ணபுரம்.
 வைகாசி பிரம்மோற்ஸவத்தில், அதிகாலையில் சிவனாகவும், மாலையில் பிரம்மாவாகவும், இரவில் விஷ்ணுவாகவும் பெருமாள் காட்சி தருகின்றார். பெருமாளின் இந்த மும்மூர்த்தி தரிசனம் சிறப்பானது. விபீஷணனை சகோதரனாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமன், இத்தலத்தில் ராமனாக நடந்து காட்சி தந்தாராம். அமாவாசை உச்சிகால பூஜை வேளையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
 மற்ற தலங்களில் அபயக் கரத்துடன் திகழும் பெருமாள் இங்கே தானம் வாங்கிக் கொள்ளும் நிலையில் காட்சி அளிக்கிறார். அதாவது, நமது கஷ்டங்களை எல்லாம் பெருமாள் வாங்கிக் கொள்கிறாராம்.
 திருமங்கை ஆழ்வார், செüரிராஜப் பெருமாளிடம் இருந்து இங்கேதான் எட்டெழுத்து மந்திர உபதேசம் பெற்றார். இந்தப் பெருமாளை திருமங்கையாழ்வார் நூறு பாசுரங்களால் பாடியுள்ளார். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வாரும் மங்களாசாஸனம் செய்துள்ளனர். இங்கே குலசேகர ஆழ்வார் செüரிராஜப் பெருமாளை ராமனாக நினைத்து "மன்னு
 புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே தாலேலோ' என்று பாடியுள்ளார்.
 மூலவருக்கு நீலமேகப் பெருமாள் என்று திருநாமம். உற்ஸவர் செüரிராஜப்பெருமாளாகவும் தாயார் கண்ணபுரநாயகியாகவும் போற்றப்படுகின்றனர்.
 திருவிழா: வைகாசி, மாசி மாதங்களில் பிரம்மோற்ஸவம். (வரும் பிப்.20ஆம் தேதி முக்கிய நிகழ்வான கருடசேவை நடைபெறுகிறது)
 இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து திருப்புகலூர், அல்லது நன்னிலம்- நாகை வழியாக திருப்புகலூர் சென்றால், அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.
 தரிசன நேரம்: காலை 6-11 வரை மாலை 5-8 வரை.
 தகவலுக்கு: 04366-270718

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com